Sunday, August 31, 2008

டைம்ஸ் இல் கிடைத்த Publicity


இந்த முறை நான் எழுதுவது என் இனிய மொழியான தமிழ் மொழியில். பள்ளிப்பருவத்தில் நான் தமிழ் கற்றிருந்தாலும் தமிழில் எனக்கு மீண்டும் ஆர்வம் கொண்டு வந்ததற்கு என் அருமை நண்பன் ராம் தான் காரணம். என் அருமை மனைவி ரம்யாவும் காரணம் என்றாலும் அவளுடைய மழலைப்பேச்சு என்னை மீண்டும் தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்து விட்டது! இன்று நான் படித்த ஒரு செய்தியில் வைரமுத்துவிற்கும் ஹிந்தி கவிஞர் Gulzarukkum மொழியின் அடிப்படையில் ஒரு சிறிய கருத்து வேறுபாடு நிகழ்ந்து இருக்கிறது. வைரமுத்து தமிழைப்போல் ஒரு இனிய மொழி இல்லை என்று கூற Gulzar உருதுவைப்போல் ஒரு சுவையான மொழி ஒன்று இல்லை என்று விவாதிக்க இயக்குனர் மணி ரத்னம் திண்டாடி இருக்கிறார்.

எந்த ஒரு மனிதனுக்கும், அடிப்படையில் தன் தாய் மொழிதான் ஆழ்ந்த சிந்தனையும் மனத்தெளிவும் கொடுக்கும் என்பது என் கருத்து. இன்றைய சமுதாய மற்றும் அடிப்படை வேலை வாய்ப்பை கருதி எல்லோரும் ஆங்கிலத்தையும் வேற்று மொழியையும் தழுவி வாழ்கிறோம். தவிர ஆங்கிலத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப முன்னேற்றங்கள் தமிழில் ஏற்பட சிறு கால தாமதம் ஏற்பட்ட காரணம் ஒன்று என்று சொல்லலாம். தமிழைப்போற்றும் அறிஞர்களும் தமிழை காக்கும் பெரியவர்களும் தமிழை மக்கள் விரும்புவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும். முன்பு கொண்டு வந்தது போல் தமிழை கட்டாயப்படுத்துவதில் ஒரு வித முன்னேற்றத்தையும் காண முடியாது. மொழி என்பது ஒருவர் விரும்பி தழுவுவது. கட்டாயத்தில் ஒருவரை எந்த மொழியையும் கற்க வைப்பது இயலாது.

விஷயத்திற்கு வருவோம். சமீபத்தில் என்னைப்பற்றி Times of India வில் ஒரு செய்தி வந்தது. பல் வேறு தொழில் நுட்ப துறைகளில் வேலை செய்தவர்களைப்பற்றி ஒரு கண்ணோட்டம் என்று வந்தது. வாழ்த்துக்கள் வந்தபடி இருந்தன. நான் அந்த சமயத்தில் ஒரு வேலையாக் அமெரிக்கா சென்று இருந்தேன். நண்பர்கள் என்னை பற்றி கிண்டலாகவும் உறவினர்கள் சந்தோஷமாகவும் வாழ்த்து கூறிய வண்ணம் இருந்தனர். ஒரு விதத்தில் இது ஒரு விளம்பரமாக இருந்தாலும் நம்மை பற்றி எழுதவும் ஏதோ இருக்கிறதே என்று ஒரு சின்ன சந்தோஷம்! ஒரு நெருங்கிய நண்பன் கிண்டலாக சொன்னான் - " என்னடா தேர்தலில் நிக்க போறியா ?" என்று கேட்டான்!! உண்மையில் ஒரு சாதனையாளன் என்று செய்தி வந்தால் மனதுக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

No comments: